உனக்கு மட்டுமா?




    "ரொம்ப நல்லா பண்ணீங்க. வித்தியாசமான சிந்தனை! நல்ல நடிப்பு...யாரோட ஐடியா இதெல்லாம்?" - என்று ஆசிரியை இவளைப் பார்த்து தான் கேட்டார்கள். இவள் அந்த அழகான பாராட்டுதலில் மயங்கிப் போய் நிற்கையில், இவள் பின்னாலிருந்து மஞ்சு வேகமாய் முன் வந்து, "நான் தான் மேடம்! என்னோட ஐடியா தான் எல்லாமே!"

          ஐயோ...இவளுக்கு யாரோ திடீரென்று மலையுச்சியிலிருந்து குப்புற தள்ளி விட்டது போல்...ஒரு உணர்வு...இவளின் மென்மையான மனதை சுத்தியால் ஓங்கி அடித்ததைப் போன்ற ஒரு வலி...

              "மஞ்சு..நிஜமாவே நீ வித்தியாசமாக யோசிச்சிருக்கே..." மேடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க...இவள் காதுகளில் எதுவுமே விழவில்லை... இவள் மனத்தின் ஒவ்வொரு அணுவும் துடிதுடித்துக் கதறுவதை அந்த மேடமோ, மஞ்சுவோ, அங்கிருந்த யாருமோ அறிந்திருக்க நியாயமில்லை...

           அடுத்த பாட வேளைக்கான மணி அடித்துவிட்டது! அடுத்த வகுப்பிற்கான ஆசிரியையும் வந்து பாடம் நடத்த ஆரம்பித்தாயிற்று. இவளுக்கோ எதுவும் உறைக்கவில்லை..இவள் முற்றிலுமாக உடைந்து மூழ்கிக் கொண்டிருந்தாள்...

          நடந்தது இதுதான்...

       ஒரு வாரத்துக்கு முன்பு, அந்த ஆசிரியை, வகுப்பு மாணவிகளை ஐந்து, ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரித்து இலக்கிய மன்றத்திற்காக ஒவ்வொரு குழுவும் ஏதாவது ஒரு தலைப்பில் குறுநாடகம் தயார் செய்து அது தொடர்பான அறிக்கையும் சமர்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

       இவள் குழுவில், மஞ்சுவும் மற்ற மூவரும் இவள் நன்றாக செய்வாள் என்பதால் இவளையே அந்த அறிக்கையை தயார் செய்யும்படி சொன்னார்கள். இவளுக்கு இதிலெல்லாம் மிகுந்த ஈடுபாடு உண்டு.

       இரண்டு நாட்களாய் யோசித்து...யோசித்து...இவள் அந்த வேலையில் மூழ்கியிருந்தாள். குறுநாடகம் எல்லோரையும் விட வித்தியாசமாய் செய்து விட வேண்டும் என்று ஒரு துடிப்பு இவளுக்குள்....

        மூன்று சிறு சிறு நிகழ்ச்சிகள்...அதில் ஓரிடத்தில் அநியாயம் நிகழும் போது..படித்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்...படிக்காத பாமர மக்கள் எப்படி நடக்கிறார்கள் - என்று சித்தரிக்கும்படி இவளே கதையையும் வசனத்தையும் எழுதினாள். நகைச்சுவை கலந்து...அதே நேரத்தில் சிந்தனையை தட்டி விடுவதைப் போன்று அந்த மூன்று சம்பவங்களுமே அழகாக அமைந்திருந்தன.

          இவளே இவள் குழு மாணவிகளுக்கு பயிற்சியும் கொடுத்தாள்...இவர்கள் முறையும் வந்தது. இவள் உட்பட ஐந்து பேருமே மிகச் சிறப்பாக செய்தார்கள்.

           நாடகம் முடிந்த போது எல்லோருமே கைதட்டினார்கள் அந்த ஆசிரியை உட்பட...

          அடுத்த நாள்தான் அந்த ஆசிரியை அவர்கள் பாராட்டிப் பேசி, "இதெல்லாம் யாருடைய ஐடியா..?" என்று கேட்டார்கள். அப்பொழுதுதான் மஞ்சு முன் வந்து...

      ஐயோ...இவளுக்கு மனத்தை கூர் கூராக யாரோ அறுப்பது போல் வலித்தது... "உழைத்தது நானல்லவா! இன்னொருவருக்கு பாராட்டா...எப்படி? எப்படி மஞ்சு உன்னால் இப்படி கூற முடிந்தது...?"  இவள் தனக்குள்ளேயே புலம்பினாள்.

       இவளின் நெருங்கிய தோழிகள் இவளிடம், "நீ சரியான ஏமாந்தவடீ! எல்லாத்தையும் கஷ்டப்பட்டு நீ செய்து விட்டு...ஏன் சும்மா நின்னுட்டு இருந்த? மேடம்கிட்ட போய் சொல்ல வேண்டியதுதானே..?" இவள் மனப்புண்ணிற்கு மருந்திட வேண்டியவர்கள் மேலும் அதைக் கீறிப் பார்த்தார்கள்.

         இவள் வீடு திரும்பினாள். இவள் அறைக்குள் சென்று உட்புறம் கதவை தாழிட்டாள்.

           இவளுக்குத் தெரிந்த ஒரே ஆறுதல்..."இவளுடைய ஜீசஸ்"...இதுவரையில் இவள் ஒவ்வொரு முறை அடிபட்டு துவண்டு விழுந்த போதும் தூக்கி நிறுத்திய அதே ஜீசஸ்.

           அழுதாள்... "ஏன் ஜீசஸ்...ஏன் எனக்கு மட்டும்...?" சின்ன நிசப்தம்...அடுத்து அவருடைய பதிலுக்கு இவள் காத்திருக்கும் ஒரு சில நிமிடங்கள்...அவர் பேசினார்...இவளுக்குள் இருந்து அவர் பேசினார்.

         "உனக்கு மட்டுமா..? இல்லையே! எனக்கும் தான்...நான் நேசிக்கும் என் ஜனங்கள் நான் செய்த நன்மைகளுக்கான நன்றியை வேறு யாருக்கோ செலுத்தும் போதெல்லாம் என் மனம் எப்படி துடிக்கும் என்று நீ என்றாவது யோசித்திருக்கிறாயா?"

            சாட்டையடி! இவளுக்கு புரிந்தது..ஐயகோ! இன்னும் எத்தனை கோடி மக்கள் இப்படி என் தெய்வத்தின் இதயத்தை புண்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என் இயேசுவின் புனித அன்பைப் பற்றி சொல்ல வேண்டுமே...

               இவள் எழுந்தாள்...கண்ணீரைத் துடைத்து விட்டு...


               "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்கிறேன்..."   (வேதாகமம்: சங்கீதம் 119:71)



~.~. ஜெ.சி.  நித்யா ~.~.

[ "நல்ல நண்பன்" - ஏப்ரல் 2002 மாத இதழில் வெளியிடப்பட்ட எனது சிறுகதை.]


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.